கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை என்பது இலங்கையின் பாடசாலைக் கல்விப்பரப்பில் மிக முக்கியமான ஒரு பரீட்சையாகும்.
இடைநிலைப் பிரிவிலிருந்து உயர்தரத்தில் துறை வாரியான கற்கைகளுக்குச் செல்வதற்கான தகுதிகான் பரீட்சையாக இது காணப்படுகிறது.
ஒன்பது பாடங்களைக் கொண்ட இப்பரீட்சையில் பாட விடயங்களின் உள்ளடக்கங்கள் குறித்த அடிப்படை அறிவு பரீட்சிக்கப்படுகிறது.
இப் பரீட்சைக்காக தமது இறுதி நாட்களையும் பரீட்சை நாட்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்வது பரீட்சை வெற்றியில் அதிக தாக்கம் விளைவிக்கக் கூடியது.
பரீட்சைக்காக தம்மை பௌதீக ரீதியாக தயார்படுத்திக் கொண்ட மாணவர்கள், தம்மை மானசீக, ஆன்மீக ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்வது அவசியமானதாகும்.
மனிதனது பௌதீக ரீதியான வெற்றிகளுக்குப் பின்னால் அவனது மானசீக ரீதியான பலம் பெருமளவில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
எனவேதான் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களை ஆன்மீக ரீதியாக ஆசிர்வதிக்கும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துமாறு கல்வியமைச்சு அறிவுறுத்துகின்றது.
ஆன்மீக ரீதியாக நாம் எம்மைத் தயார் படுத்தல் வெறுமனே தொழுது பிரார்த்தித்தல் என்பதல்ல, மாற்றமாக ஆன்மீகம் என்பது எமது பௌதீக ரீதியான வாழ்வின் மறுபகுதி. அந்த வகையில் ஆன்மீக ரீதியாக எம்மை தயார்படுத்திக் கொள்ளல் என்பது எமது வாழ்வை, எமது மனதை, எமது செயற்பாடுகளை ஆன்மீக மற்றும் மானசீக ரீதியாக ஒழுங்குபடுத்திக் கொள்வதாகும்.
உலகில் ஆன்மீக ரீதியாக, மானசீக ரீதியாக தம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டவர்கள், பலப்படுத்திக் கொண்டவர்களே வெற்றியின் உச்சத்தை தொட்டுள்ளார்கள்.
உலகில் மிகவும் வெற்றிகரமான மனிதர்களுள் முதன்மையானவராகக் கருதப்படும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தனது வாழ்வில் அதிக நேரத்தை ஆன்மீகத்திற்கே ஒதுக்கியிருக்கிறார்கள்.
அதுதான் அவரது வெற்றியின் முக்கியமான இரகசியம்.
பரீட்சைக்குத் தயாராகின்ற இறுதிக் காலங்கள் என்பதால் முதலில் நாம் எமது மானசீக ரீதியான பாரங்களை, சுமைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக எம்மைச் சூழ உள்ள அனைவரதும் ஆசீர்வாதத்தை, பிரார்த்தனையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக எமது ஆசிரியர்கள், பெற்றார்கள், மூத்தவர்கள், குடும்பத்தாருடைய ஆசீர்வாதமும் பிரார்த்தனையும் எமக்கு அவசியமாகின்றது.
இதன் மூலம் மானசீக ரீதியாக நாம் எம்மை தூய்மைப் படுத்திக் கொள்கிறோம். எம்மால் ஏதாவது தவறுகள், பிழைகள் நடந்திருப்பின் அதற்காக மன்னிப்பு பெற்றுக் கொள்கிறோம்.
எமது முயற்சி வெற்றிபெற ஆசீர்வாதமும் ஊக்கமும் பெறுகின்றோம்.
அத்தோடு பரீட்சைக்கு முன்னர் எம்மால் முடிந்த ஒரு ஸதகாவை வழங்குவதன் ஊடாக அல்லாஹ்விடம் எமது காரியங்களை இலகுபடுத்திக் கொள்வதற்காக உதவி கோரிக் கொள்ள வேண்டும்.
ஸதகாக்கள், அன்பளிப்புக்கள் எமது காரியங்களை இலகுபடுத்தும்.
அடுத்த விடயம், நாம் கற்கின்ற சுற்றுப் புறச் சூழலை அமைதியானதாயும் சுத்தமானதாயும், ஒழுங்குபடுத்தப்பட்டதாயும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
அத்தோடு நாமும் எப்போதும் சுத்தமாக எம்மை வைத்துக் கொள்ள வேண்டும். எமது பாடக் குறிப்புக்களையும் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எம்மைச் சூழ எமக்கு இடையூராக அமைகின்ற எதனையும், யாரையும் நாம் வைத்துக் கொள்ளக் கூடாது.
அடுத்து, எமது நாளை நாம் சிறப்பாக ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். நேரகாலத்துடன் உறங்கி அதிகாலையில் விழித்தெழுகின்ற வழக்கம் குறிப்பாக பரீட்சை நாட்களில் அவசியப்படுகின்றது.
நாம் இதுவரை கற்றவற்றை மீள நினைவுபடுத்துகின்ற (Recalling) செயற்பாடாகத்தான் பரீட்சை பெரும்பாலும் அமைந்திருக்கின்றது. அதற்காக எமக்கு போதிய ஓய்வும், உறக்கமும், அமைதியான மனோ நிலையும் அவசியமாகின்றது.
எனவே, நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கின்ற குறிப்புக்கள், மீட்ட வேண்டிய விடயங்களை மீட்டிக் கொண்டு நேரகாலத்துடன் உறக்கத்திற்கு சென்று விடுவோம்.
பின்னர் அதிகாலையில் நேரகாலத்துடன் விழித்தெழுந்து, தஹஜ்ஜுத் நேரத்தில் இரண்டு ரகஅத்துக்கள் தொழுது பிரார்த்திப்பதுடன் பரீட்சைக்காக மீட்ட வேண்டிய பகுதிகளை மேலோட்டமாக ஒரு முறை பாரத்துக் கொள்ளலாம்.
பின்னர் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றுவதோடு, பரீட்சை நாட்களாயின் நேரகாலத்துடன் குளித்து சுத்தமாகி, ஆரோக்கியமான காலை உணவை எடுத்தக் கொண்டு நேரகாலத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்வதற்கு தயாராக வேண்டும்.
பரீட்சை மண்டபத்திற்கு செல்வதற்கு முன்னர் இரண்டு ரகஅத் ஸலாதுல் இஸ்திஹாரா தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்திக் கொள்ள வேண்டும்.
பின்னர் நேரகாலத்துடன் பரீட்சை மண்டபத்திற்குள்ளால் சென்று அமர்ந்து கொள்ள வேண்டும்.
பரீட்சையின் இறுதி நேரம் வரை பரீட்சைக் குறிப்புக்களை வைத்துக் கொண்டு பாட மீட்டல் செய்வது எம்மிடம் இருக்கின்ற பிழையான வழக்கமாகும். அதனை நாம் இயன்றவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பரீட்சை மண்டபத்தில் அமர்ந்த பின்னர் பரீட்சைக்கான வினாத்தாள்கள் தரும் வரை அமைதியாக இரு கண்களையும் மூடிக் கொண்டு அனைத்து சிந்தனைகளை விட்டும் மனதை துண்டித்த வண்ணம் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பரீட்சை வினாத்தாள்கள் தரப்பட்டதன் பின்னர் அல்லாஹ்வின் உதவியை வேண்டி மனதால் பிரார்த்துக் கொண்டு நிதானமாக அறிவுறுத்தல்களையும் வினாக்களையும் வாசித்துக் கிரகித்துக் கொள்ள வேண்டும்.
பின்னரே விடைகளை எழுத முற்பட வேண்டும். எப்போதும் பரீட்சையின் போது நிதானத்தைக் கைக் கொள்ள வேண்டும்.
நிதானம் அல்லாஹ்வின் பண்பு, அவசரம் ஷைத்தானின் பண்பு. நாம் அவசரப்படுவதால் தவறுகள் எற்படுவதற்கான வாய்ப்பே அதிகமாகும்.
பரீட்சையின் நேரம் முடிவடைவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்னர் அனைத்து விடைப்பத்திரங்களையும் சரிபார்த்து அவற்றை ஒப்படைப்பதற்கான தயார் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்து, பரீட்சை மத்திய நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் எப்போதும் சிநேகபூர்வமான உறவைப் பேணிக் கொள்ள வேண்டும்.
அந்த அதிகாரிகள் எப்போதும் எமக்கு உதவி செய்வதற்காகவே இருக்கின்றார்கள் என்ற உடன்பாடான மனோ நிலையுடன் அவர்களுடன் உறவாட வேண்டும்.
உண்மையில் பரீட்சை நிலையங்களில் அதிகாரிகள் நியமிக்கப்படுவது பரீட்சாத்திகளுக்கு உதவி செய்வதற்காகவேயாகும்.
அவர்கள் செய்வது ஒரு சேவையாகும். நாம் அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்கின்ற போது எமக்கு பரீட்சையின் போது சிறந்த முறையில் அவர்களது ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவதற்கு இது வாய்ப்பாக அமைகின்றது.
அது மாத்திரமன்றி, எமது பாடசாலை, சமூகம் குறித்த நல்லபிப்பிராயம் அவர்களிடம் ஏற்படுகின்றது.
குறிப்பாக பரீட்சை மண்டபத்திலுள்ளவர்களுக்கு வாழ்த்துக் கூறுவது, அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடுவது, பரீட்சை முடிந்து வருகின்ற போது நன்றி கூறுவது என்பன மிக முக்கியமானதாகும்.
பரீட்சையில் நாம் எந்தவிதமான மோசடிகளிலும் ஈடுபடாமல் நேர்மையாக பரீட்சைக்கு முகம் கொடுப்பது எமது வாழ்வு சிறப்பாக அமைவதற்கான அத்திவாரமாகும்.
பரீட்சை மத்திய நிலையத்தில் எமது ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
இவை அனைத்துடனும் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் எம்மால் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து சுகாதார ரீதியான அறிவுறுத்தல்களையும் நாம் முறையாக பின்பற்ற முற்பட வேண்டும்.
அவசியமற்ற பீதியை நாம் எமது மனங்களில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. எப்போதும் எமது காரியங்களை இலகுபடுத்தித் தருகின்ற இறைவனிடம் அனைத்தையும் பொறுப்புச் சாட்டி வெற்றிகரமாக பரீட்சைக்கு முகம் கொடுத்து, சிறந்த சித்தியைப் பெற்றுக் கொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
26.02.2021
அஷ்-ஷெய்க் எம்.என்.இக்ராம்
மதீனா தேசிய பாடசாலை
சியம்பலாகஸ்கொடுவ