“கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள் குறித்த மாணவர் புலக்காட்சி” என்ற தலைப்பில் இடம்பெற்ற ஆய்விற்காக திரட்டப்பட்ட இலக்கிய மீளாய்வின் முக்கியமான பகுதிகளை பயன் கருதி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஆய்வின் தமிழ் வடிவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான அவகாசம் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. இந்த ஆய்வு திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி F.M.Nawastheen அவர்களின் தலைமையில் திற்நத பல்கலைக்கழக விரிவுரையாளர் Kausalya Perera வுடன் அடியேனும் இணைந்து மெற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் என்னையும் இணைத்துக் கொண்டு ஆய்வனுபவத்தைப் பெற்றுத் தந்த கலாநிதி நவாஸ்தீன் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
2020 முதற் பகுதியில் சர்வதேச அளவிலும் இலங்கையிலும் யாரும் எதிர்பாராதவிதமாகத் திடீரென தீவிரமாகத் தொடங்கிய COVID 19 நோய்த்தொற்றுப் பரவல் சூழல் பொதுவாகவே அனைவரதும் இயல்பு வாழ்வை பாதித்திருக்கிறது. குறிப்பாகக்கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களது கல்விச் செயற்பாட்டின் இயல்பு நிலையில் பாரிய மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளது.
UNESCO Institute for Statistics (UIS) இன் கணக் கெடுப்பின்படி 05.04.2020 ஆகின்றபோது 195 நாடுகளில் உள்ள 1,598,099,008 மாணவர்களது இயல்பான கல்விச் செயற்பாடுகள் இதனால் பாதிப்பிற்கு உட்பட்டிருந்தது. இது கற்றலில் ஈடுபடுகின்ற மொத்த எண்ணிக்கையில் 91.3% ஆகும். இலங்கையில் 5,570,666 மாணவர்களது கல்விச் செயற்பாடுகள் பாதிப்பிற்குட்பட்டுள்ளன. இதில் இரண்டாம் நிலையில் கற்கும் 2,727,965 மாணவர்களும் உள்ளடங்குவர் (UIS, 2020). இரண்டாம் நிலையில் கற்போர் பாதிக்கப்பட்ட மாணவர்களில் 48.97% ஆகும்.
இந்த நிலைக்கு முகம் கொடுப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு தொலைநிலைக்கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன (National learning platforms and tools – UNESCO 2020).
இலங்கை அரசு 2020/15 இலக்க சுற்றுநிருபத்தின் ஊடாக தொலைநிலைக் கற்றலை நோய்த் தொற்று இடர் நிலையிலும் தொடர்ச்சியான கற்றலை மேற்கொள்வதற்கான ஒரு ஏற்பாடாக பரிந்துரைத்துள்ளது (Circular, 2020).
COVID19 தொற்று பரவலைத் தடுப்பதற்காக சமூக இடைவெளியை பேணுதல் ஒரு உயிர்காக்கும் செயற்பாடாகும். தொலைநிலைக் கற்றல் கல்விச் செய்றபாட்டில் சமூக இடைவெளியை பேணுவதற்கான பிரதான வாயிலாக அமைகின்றது. அந்த வகையில் K 16 கல்வியலாளர்கள் தொலைநிலைக் கற்றலுக்கான சாதனங்களை ஒரு தளத்தில் ஒன்று திரட்டி மாணவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று வீடுகளிலுள்ள நோயெதிர்ப்புச்
சக்தி குறைந்த தமது உறவினர்களுக்கான நோய்க் காவியாக மாறாதிருக்கும் வகையில் தமது வீடுகளிலிருந்தே கற்பதற்கான ஏற்பாட்டை செய்வதற்காக முயற்சித்து வருகின்றார்கள். (Guhlin, 2020)
தொலைநிலைக் கற்றல் செயற்பாட்டை பெற்றுக் கொள்வதனை இலகுபடுத்தும் வகையில் உலக அளவில் அதனை உருவாக்குவதற்கும் வழங்குவதற்கும் உதவும் செயலிகளையும் தொழிநுட்பங்களையும் வழங்கும் நிறுவனங்கள், தளங்கள் அவற்றை இலவசமாகவும் அனைவரும் பெற்றுக் கொள்ளும் வகையிலும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றன (Distance learning solutions – UNESCO, 2020). தொழிநுட்பக் கருவிகளை மையமாகக் கொண்ட கற்பித்தலின் போது இடம்பெறுகின்ற கலந்துரையாடல்களையும் அவற்றில் கலந்து கொள்பவர்களது எதிர்வினைகளையும் பகுப்பாய்வு செய்து பார்க்கின்ற போது; நிகழ்நிலை கற்கைகளினை தயார் செய்கின்ற போது அதில் பங்குபற்றுபவர்களது புலக்காட்சி குறித்து அறிந்து வைத்திருப்பது முக்கியமானதாகும் (Cicciarelli 2007).
இதனைக் கற்போரின் சமூகப் பிரசன்ன நடத்தைகள்குறித்து விளக்குகின்ற Colonel Parker இன் மானிட உளவியல் கொள்கை விளக்குகிறது. Carl Rogers மற்றும் Abraham Maslow போன்ற மானிடவியலாளர்கள் கற்பித்தலில் ஈடுபடுபடுவோர் பாடவிதானம் குறித்து கவனம் செலுத்துவதைப் பார்க்கிலும் கற்போர் குறித்தே அதிக கவனம் செலுத்த வேண்டும். அதாவது பாடவிதானத்தை அவர்கள் எவ்வாறு விளங்கிக் கொள்வார்கள் என்பதில் அவர்களது கவனம் குவிய வேண்டும் (Cicciarelli, 2007) என்பதனை வலியுறுத்துகின்றனர். எனவே, தொலைநிலைக் கற்றலை சரியாக வழிப்படுத்துவதில் அதுகுறித்த மாணவர்களது புலக்காட்சி முக்கியத்துவம் பெறுகின்றது.
அதே போன்று, அதனைப் புரிந்து கொள்வதற்கு தொலைநிலைக் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்தும் கல்விச் சிந்தனைப் புலங்களை புரிந்து கொள்வதும் முக்கியமானதாகும்.
கல்வியலாளர்கள் கற்றல் கற்பித்தல் செயன்முறையயை பொதுவாக pedagogy, andragogy என வகுத்து நோக்குகின்றனர் (Halupa, 2015). எங்கு எப்போது எப்படி என்பதற்கப்பால் கற்றல் நிகழ்கின்றது. கற்பவர் என்ன வயதைச் சார்ந்தவர் என்பதற்கப்பால் அவர் தனது சொந்த கற்றல் செயன்முறையில் ஈடுபடுகின்றார் (Merriam, 2001).
ஒருவருடைய கற்றல் பாங்கு (pedagogy, andragogy) எந்த வகையானதாயினும் digital literacy இன்றைய கல்விச் செயன்முறையில் முக்கியமானதாகக் காணப்படுகிறது. தொழிநுட்பம் இன்று மாணவர்களை தகவல் நுகர்வாளர்களாக மாற்றியுள்ள சூழலில் பாரம்பரியமான ஆசிரியர் மைய (pedagogy) கற்றற் செயன்முறை, மாணவர் மைய கற்றற் செயன்முறை (andragogy) என்பதற்கப்பால் தமது கற்றலை தாமாக தேடிப் பெற்றுக் கொள்கின்ற heutagogy -self-determined learning- கற்றற் செயன்முறையை நோக்கி மாணவர்களை இட்டுச் சென்றுள்ளது. (Halupa, 2015)
heutagogy கற்றல் செயன்முறையில் ஆசிரியர் கற்பதற்கான சாதனங்களை கிடைக்கச் செய்பவராக இருப்பார். ஆனால் மாணவர்கள்தான் தாம் தமது கற்றல் செயன்முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை தீர்மானிப்பர். heutagogy கற்றல் செயன்முறை குறித்த விடயத்தை முன்வைத்த Hase and Kenyon (2000) இன் எதிர்வு கூறலுக்கமைய தொழிநுட்பம் heutagogical முறையை நோக்கி கற்றல்-கற்பித்தல் செயன்முறையை இட்டுச் சென்று கொண்டிருக்கிறது (Halupa, 2015). E-Learning சூழலில் கற்றலை சாத்தியப்படுத்த வேண்டுமாயின் மாணவர்களிற்கு சுயமுகப்படுத்தப்பட்ட கற்றல் (self-regulated learning -SRL) ஆற்றல் அவசியப்படுகின்றது (Leacock & Nesbit, 2006).
COVID-19 தொற்றினைத் தொடர்ந்து ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே உலகலாவிய ரீதியில் முறைமைத் தலைவர்கள் (system leaders), கல்வியலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வியத்தகுந்த வகையில் மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து தொலைநிலைக் கற்றலை நோக்கி நகர்வதற்கு முனைப்புக் கொண்டனர். (Fullan, Quinn, Drummy, Gardner, 2020). இதனடியாக நேரடிப் பிரசன்னத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த கல்விச் செயற்பாடுகள் அத்தனையும் நோய்த்தொற்றை தவிர்க்கும் வகையில் தொலைநிலை கல்விச் செயற்பாடுகளாக இடம்பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இடர் காலத்தில் இடம்பெறும் இத்தகைய கல்விச் செயற்பாடுகளை குறிக்க Emergency Remote Teaching அல்லது Learning என்ற கலைப்பதம் பயன்பாட்டில் காணப்படுகின்றது (Hodges, Lockee, Moore, Trust, & Bond, 2020).
இதற்கும் நிகழ்நிலைக்கற்றல் (online Learning), தொலைக்கல்வி (distance Learning) என்பவற்றுக்குமிடையிலேயே வேறுபாடுகள் காணப்படுகின்றன. நிகழ்நிலைக் கற்றல் மற்றும் தொலைக்கல்வி என்பன ஏற்கனவே அதன் வடிவங்கள் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஒழுங்குபடுத்தப் பட்ட அமைப்பில் தயாரிக்கப்பட்டதாகவும் காணப்படும். தொலை நிலைக் கற்றலில் ஏற்கனவே இருந்த வகுப்பறைக்கு பதிலீடாக கற்றல் சாதனங்களும், வழிகாட்டல்களும் மாணவர்களை சென்றடைவதற்கான ஊடகமாக பல்வேறு இலத்திரனியல் சாதனங்கள் பயன்படுத்தப்படும்(Hodges, Lockee, Moore, Trust, & Bond, 2020). இதில் இணையத்தளம், சமூக ஊடகங்கள், தொடர்பாடல் செயலிகள் முதல் தொலைக்காட்சி, வானொலி, DVD, அச்சடிக்கப்பட்ட சாதனங்கள் (printed Material) என்பன வரை மாணவர்களது கற்றலை இடையறாது தொடர்வதற்காக ஏலவே முன்திட்டமிடப்படாத தொடர்பாடலுக்கு வசதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இதில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ் நிலைக் கற்றல் சாதனங்களும் காணப்பட முடியும் (Reich, 2020).
தொலைநிலைக் கற்பித்தலின் போது கல்விச் சமத்துவம் (Educational Equity) குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கான வளங்கள், சந்தர்ப்பங்கள் போன்றவை அவர்களது இன, மத, பால், மொழி, குடும்ப பொருளாதார பின்னணிகளுக்கப்பால் அவர்களுக்கு அவசியமான தருணத்தில் அவசியமான வகையில் அவசியமான இடத்தில் கிடைக்கப்பெற வேண்டும் (UNESCO, 2019). ஆனால், உலக அளவில் பொதுவாகவும் இலங்கையில் குறிப்பாகவும் நோக்கும் போது, கல்வியில் இச்சமத்துவம் சரியாகப் பேணப்படுவதில்லை. உலக வங்கியின் மனிதவள முதலீட்டுச் சுட்டியின் (World Bank Human Capital) படி இலங்கை மாணவர் ஒருவர் தனது13 வருட பாடசாலைக் காலத்தில் 4.7 வருடங்கள் பின்தங்கியே காணப்படுகிறார். அத்தோடு குடும்ப நிலை, வருமானம், வாழ்விடம்… போன்ற பல்வேறு காரணிகளால் கல்விச் சமத்துவமின்மை நிலவுகிறது. (Sarma, Licht, & Kalugalagedera, 2018)
இந்நிலையின் இடைவெளி தொலைநிலைக் கற்றலினால் மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. LIRNEasia வின் 2018-2019 கணக்கெடுப்பு அறிக்கையின்படி இலங்கையில் 34% மான பாடசாலைப் பருவ பிள்ளைகள் உள்ள குடும்பங்களே இணைய வசதியை கொண்டிருக்கின்றன. அவற்றுள் 90% வர்கள் தமது கையடக்கத் தொலைபேசியூடாகவே இந்த வசதியை கொண்டிருக்கின்றனர். அப்படியாயின் 66% மானவர்களுக்கு இணையப்பாவனை வசதி கிடைக்கப் பெறவில்லை. அதே நேரம் 60% களுக்கு 1GB இணையத்தரவு வசதியைப் பெற்றுக் கொள்வது அவர்களது வருமானத்துடன் ஒப்பிடுகையில் அதிக செலவினைக் கொண்டதாகும் (Zainudeen & Amarasinghe, 2020). இந்த தரவுகள் நகர்ப்புரத்திற்கும் கிராமப்புரத்திற்கும் மலைநாட்டிற்குமிடையில் பாரிய வித்தியாசங்களைக் காண்பிக்கின்றது(Computer Literacy Statistics, 2018) என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
இலங்கையின் கல்வி முறை பெரிய அளவில் மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்துவதை மையமாகக் கொண்டிருப்பது தொலைக் கல்விச் செயற்பாட்டினை ஒழுங்குபடுத்துவதற்கு பெரிய தடையாக அமைந்து காணப்படுகிறது (Gamage, 2020). இதே விடயத்தை நிகழ்நிலைக் கற்றல் கற்பித்தலை இக்காலப் பகுதியில் முழுமையாக அமுல்படுத்திய முதல் நாடு என்றவகையில் சீனா போன்ற தொழிநுட்ப ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற போது அங்கு 270 மில்லியன் மாணவர்கள் நிகழ்நிலைக் கற்றலில் பங்கு பற்றியுள்ளார்கள்.
கடந்த 3 தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்நிலைக் கற்றலுக்கான அடிக்கட்டுமான வேலைத்திட்டம் மற்றும் மாணவர் மையப்படுத்திய (student-centric) சுயகற்றலுக்கேற்ற வகையான கல்வியமைப்பும் ஏலவே கட்டியெழுப்பப்பட்டிருந்தமையால் தொலைநிலைக் கல்வியின் சிறப்பு மாதிரியான நிகழ்நிலைக் கற்பித்தல் Covid 19 பரவல் விடுமுறைக் காலப்பகுதியல் வெற்றியளித்துள்ளது (Zhou, Li, Wu, & Zhou, 2020).
தொலைநிலைக் கற்றல் கற்பித்தலிலுள்ள முக்கிய மாதிரியான நிகழ்நிலைக் கற்பித்தலை வடிவமைக்கும் போது மாணவர் தனிநபர் வேறுபாடு மட்டும் மாணவர் கற்றல் பாங்கு என்பவற்றை கவனத்திற் கொள்வது ஏனைய கற்றல் கோட்பாடுகளைப் பாரக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்தது (Meyer & Murrell, Summer 2014).
தொலைநிலைக் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டின் தேவை Covid 19 இற்கான பரந்தளவிலான பரிசோதனை மற்றும் அதற்கான தடுப்பூசுகள் கண்டுபிடிக்கப்படும் வரை காணப்படும். எனவே, உலக அளவில் பாடசாலைப் பருவப் பிள்ளைகளில் பாதிக்கும் குறைவானவர்களுக்கு சரியான இணைய வசதியோ, தொழிநுட்பச் சாதனங்களோ சரியாகக் கிடைக்காத சூழலில் அவசர நிலையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநிலைக் கற்றல் செயற்பாடுகள் இவ்வாறே தொடர முடியாது. ஏனெனில் இது மாணவர்களது கல்விக்கான உரிமையை வெகுவாக பாதிக்கும்.
பொருளாதார ரீதியான பலவீனம், உணவுப் பாதுகாப்பின்மை, பாரியலவிலான வேலைவாய்ப்பின்மை, வதிவிட வசதிகளில் ஏற்பட்டுள் நிலையற்றதன்மை, சுகாதார ரீதியான நெருக்கடிகள், உளவியல் ரீதியான நெருக்கடிகள் என்பன நாம் இன்னோர் கற்றல்-கற்பித்தல் ஒழுங்கை நோக்கி நகர வேண்டிய தேவையை உணர்த்துகின்றன. அதே நேரம் சரியாக திட்டமிட்டு வடிவமைக்கப்படாத தொலைநிலைக் கற்பித்தலில் உள்ள உளவியல் ரீதியான பாதிப்புக்களும் இதனை வலியுறுத்துகின்றன. 98% மாணவர்கள் ஆசிரியர்கள் தம்மீது ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை. அவர்கள் தாம் பிரத்தியேகமான முறையில் வழிநடாத்தப்படுவதையே விரும்புகின்றனர் என தரவுகள் குறிப்பிடுகின்றன.
எனவே, இன்றைய சூழலில் புலூமின் கோட்பாடுகளுக்கு முன்னர் மாஸ்லோவின் கோட்பாடுகள் (Think Maslow before Bloom) குறித்து சிந்தக்க வேண்டியுள்ளது. அந்தவகையில் நேரடி மற்றும் நிகழ்நிலை இரண்டையும் இணைத்த கலப்புக் கற்பித்தல் (Blended Learning) முறையொன்றை நோக்கி நகர வேண்டிய உடனடித் தேவை தற்போது காணப்படுகிறது (Fullan, Quinn, Drummy, Gardner, 2020).
References
1. Akyildiz, S.T. (2019). Do 21st Century Teachers Know about Heutagogy or Do They Still Adhere to Traditional Pedagogy and Andragogy? International Journal of Progressive Education, 15(6), 151-169. doi: 10.29329/ijpe.2019.215.10
2. Basilaia, G., & Kvavadze, D. (2020). Transition to Online Education in Schools during a SARS-CoV-2 Coronavirus (COVID-19) Pandemic in Georgia. Pedagogical Research, 5(4), em0060. https://doi.org/10.29333/pr/7937
3. Blaschke, L. M. (2014). Using social media to engage and develop the online learner in self-determined learning. Research in Learning Technology, 22. https://doi.org/10.3402/rlt.v22.21635
4. Cheng, Xiaoqiao, Challenges of ‘School’s Out, But Class’s on’ to School Education: Practical Exploration of Chinese Schools during the COVID-19 Pandemic (March 31, 2020). Sci Insigt Edu Front 2020; 5(2):501-516.. Available at SSRN: https://ssrn.com/abstract=3565605 or http://dx.doi.org/10.2139/ssrn.3565605
5. Chick, R. C., Clifton, G. T., Peace, K. M., Propper, B. W., Hale, D. F., Alseidi, A. A., & Vreeland, T. J. (2020). Using Technology to Maintain the Education of Residents during the COVID-19 Pandemic. Journal of Surgical Education. doi: 10.1016/j.jsurg.2020.03.018
6. Cicciarelli, M. (2007). Behavorial, Cognitive, and Humanistic Theories. International Journal of Information and Communication Technology Education, 3(4), 1–12. doi: 10.4018/jicte.2007100101
7. Cole, R. A. (2000). Issues in web-based pedagogy: A critical primer. Westport, CT: Greenwood Press.
8. Coleman, V. (2013) ‘Social media as a primary source: a coming of age’, EDUCAUSE Review,[online] Available at: http://www.educause.edu/ero/article/social-media-primary-sourcecoming-age
9. Computer Literacy Statistics 2018 (First six months … (2018). Retrieved June 16, 2020, from http://www.statistics.gov.lk/education/ComputerLiteracy/ComputerLiteracy-2018Q1-Q2-final.pdf
10. Distance learning solutions – UNESCO. (2020). Retrieved June 11, 2020, from https://en.unesco.org/covid19/educationresponse/solutions
11. Frenette, M., Frank, K., Deng, Z., & Statistics Canada. (2020). COVID-19 pandemic: School closures and the online preparedness of children. Ottawa: Statistics Canada = Statistique Canada.
12. Fullan, M., Quinn, J., Drummy, M., Gardner, M. (2020), “Education Reimagined; The Future of Learning”. A collaborative position paper between New Pedagogies for Deep Learning and Microsoft Education. http://aka.ms/HybridLearningPaper
13. Gamage, S. (2020, May 15). What did we learn about distant education during the lockdown? Retrieved June 16, 2020, from http://www.ft.lk/columns/What-did-we-learn-about-distant-education-during-the-lockdown/4-700217
14. Guhlin, Miguel. “Remote Learning Tools for Schools.” Https://Blog.tcea.org/, 9 Mar. 2020, blog.tcea.org/remote-learning-tools/
15. Halupa, C. (2015). (PDF) Pedagogy, Andragogy, and Heutagogy – Research Gate. Retrieved June 12, 2020, from https://www.researchgate.net/publication/297767648_Pedagogy_Andragogy_and_Heutagogy
16. Hodges, C. B., Lockee, B. B., Moore, S., Trust, T., & Bond, M. (2020, March 27). The Difference Between Emergency Remote Teaching and … Retrieved June 14, 2020, from https://er.educause.edu/articles/2020/3/the-difference-between-emergency-remote-teaching-and-online-learning
17. Jan, Anbareen, Online Teaching Practices During COVID-19: An Observation Case Study. SSHO-D-20-00181. Available at SSRN: https://ssrn.com/abstract=3584409 or http://dx.doi.org/10.2139/ssrn.3584409
18. Jung, I. (2019). Open and distance education theory revisited: Implications for the digital era. Singapore: Springer.
19. Justin Reich, et. al. (2020) Remote Learning Guidance from State Education Agencies during the COVID-19 Pandemic: A First Look. Retrieved from osf.io/k6zxy/
20. Leacock, T.L. & Nesbit, J.C. (2006). Cognitive tools for self-regulated e-learning. In M. Bullen & D.P. Janes (Eds.). Making the Transition to E-learning: Strategies and Issues (pp. 300-317). Hershey, PA: Information Science Publishing.
21. Merriam, S. B. (2001). Andragogy and self‐directed learning: Pillars of adult learning theory. New Directions for Adult and Continuing Education, 89, 3-14.
22. Meyer, K. A., & Murrell, V. S. (summer 2014). A National Study of Theories and Their Importance for Faculty Development for Online Teaching. Online Journal of Distance Learning Administration, 17(2). doi:https://www.westga.edu/~distance/ojdla/summer172/Meyer_Murrell172.pdf
23. National learning platforms and tools. (2020, May 27). Retrieved June 10, 2020, from https://en.unesco.org/covid19/educationresponse/nationalresponses
24. Pandey, V., Amir, A., Debelius, J., Hyde, E. R., Kosciolek, T., Knight, R., & Klemmer, S. (2017). Gut Instinct. Proceedings of the 2017 CHI Conference on Human Factors in Computing Systems. doi: 10.1145/3025453.3025769
25. Reich, J., Buttimer, C., Fang, A., Hillaire, G., Hirsch, K., Larke, L., Littenberg-Tobias, J., Moussapour, R., Napier, A., Thompson, M., Slama, R. (2020). Remote Learning Guidance From State Education Agencies During the COVID-19 Pandemic: A First Look. 10.35542/osf.io/437e2.
26. Sarma, V., Licht, S., & Kalugalagedera, T. (2018, November). Educational Inequalities in Sri Lanka: National Data and … Retrieved June 15, 2020, from http://www.cepa.lk/content_images/publications/documents/english-20190212081040.pdf
27. Setiawan, A. R. (2020, April 15). Scientific Literacy Worksheets for Distance Learning in the Topic of Coronavirus 2019 (COVID-19). https://doi.org/10.31004/edukatif.v2i1.xx
28. Ministry Of Education. (2020). preparing institutions to prevent of spreading COVID – 19 (Circular Number: 2020/15). Isurupaya, Srilanka: Ministry of education. Retrieved June 11, 2020, from http://moe.gov.lk/web/images/circulars/2020/S/1589277734-2020-15s.pdf
29. UIS (2020, June 4). COVID-19 Impact on Education. Retrieved June 10, 2020, from https://en.unesco.org/covid19/educationresponse
30. UNESCO. (2019). Right to education handbook | Right to Education Initiative. Retrieved June 15, 2020, from https://www.right-to-education.org/resource/right-education-handbook
31. Zainudeen, A., & Amarasinghe, T. (2020, May 16). E-learning opportunities in the Asian global south … Retrieved June 16, 2020, from https://lirneasia.net/2020/05/e-learning-opportunities-in-the-asian-global-south-presentation/
32. Zhou, L., Li, F., Wu, S., & Zhou, M. (2020, March 15). ‘School’s Out, But Class’ On’, The Largest Online … Retrieved June 16, 2020, from https://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=3555520